Thursday, May 15, 2008

லிங்கம் அறிக்கை: வெளியிடுவது பிரதமரின் கடமை

லிங்கம் ஒளிநாடா மீதான அரச ஆணைய அறிக்கையைப் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி வெளியிட வேண்டும் எனச் சமூக உரிமை இயக்கமான அலிரான் வலியுறுத்தியுள்ளது.
இவ்விசயத்தில் அப்துல்லாவுக்கு விருப்புரிமை கிடையாது என்றும் அறிக்கையை வெளியிடுவது அவரது கடமை என்றும் அலிரான் தலைவர் பி. ராமகிருஷ்ணன் கூறினார்.
“அது தேசியம் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம். அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை நாட்டு மக்கள் அறிந்து கொள்வதா கூடாதா என்பதைத் தனிப்பட்ட ஒருவர் முடிவு செய்ய விட்டுவிடக் கூடாது”, என்றவர் கூறினார்.
அறிக்கையை வெளியிடுவது குறித்து அப்துல்லாவும் அவரது அமைச்சரவையும் வெள்ளிக்கிழமை வாராந்திரக் கூட்டத்தில் முடிவு செய்வர்.
முன்னதாக பிரதமர், அந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த பின்னர்தான் அதை வெளியிடுவது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
1996-ல் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சைட் அகமட் ஐடிட் 33-பக்க கடிதத்தில் நீதித்துறை ஊழலை அம்பலப்படுத்த முனைந்த விவகாரத்தை ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
“அப்போது ‘அதில் சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் நீதிக்குமுன் நிறுத்தப்போவதாக’ முழக்கமிட்ட முன்னாள் சட்டத்துறை தலைவர் அந்த விவகாரத்தை அப்படியே மூடி மறைத்து விட்டார்”.
“12 நீதிபதிகளுக்கு எதிராக 112 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்ததாக சட்டத்துறை தலைவர் கூறினார். எல்லாமே மூடி மறைக்கப்பட்டது”, என்று ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதேபோல் லிங்கம் ஒளிநாடா விவகாரமும் ஆகி விடக்கூடாது. எனவேதான் அரச ஆணைய அறிக்கையை வெளியிடுவது முக்கியமாகும் என்றாரவர்.
“அறிக்கையின் உள்ளடக்கம் அந்த ஒருவர் (அப்துல்லா) மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. எனவே அதை வெளியிடுவதா இல்லையா என்று முடிவு செய்யும் சலுகையோ உரிமையோ அவருக்குக் கிடையாது”, என்று ராமகிருஷ்ணன் கூறினார்.
sumber:http://www.malaysiaindru.com/?p=1429
baspas:

No comments: